இன்று கார்த்திகை தீபத் திருநாள்

இன்று கார்த்திகை தீபத் திருநாள்

 

இன்று திருக்கார்த்திகைத் தீபத் திருநாள். இந்நாளிலே இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாளாகும்.

கார்த்திகை மாதத்தின் சிறப்புக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. இம் மாதத்தில் பௌர்ணமி திதி, கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகின்ற நாளைத் தான் நாம் கார்த்திகைத் தீபத் திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.

எல்லாத் திருக்கோயில்களிலும் இத் திருக்கார்த்திகை விழா சர்வாலய தீபம் என்றும், முருகன் கோயில்களில் குமாராலய தீபம் என்றும், விஷ்ணு கோயில்களில் விஷ்ணுவாலய தீபம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினத்திலே இந்துக்கள் தத்தமது இல்லங்களிலே சிட்டி விளக்குகளில் தீபம் ஏற்றி நேர்த்தியாகவும் அழகாகவும் அடுக்கி வைத்து, இடத்தைப் பிரகாசமாக்கி, அந்த தீப ஒளியிலேயே இறைவனை வழிபடுவர். பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நட்டு வைத்து, அதன் மேல் தீப பந்தம் ஏற்றி வழிபடுவதும் இதன் சிறப்பம்சமாகும்.

நாளைய தினம் திருக்கார்த்திகை திருவிழா ஆலயங்களில் கொண்டாடப்படும். இதன்போது ஆலயங்களில் சொக்கப்பனை எரிக்கப்படுவதும் வழக்கம். பனை ஓலைகளாலும் தென்னை ஓலைகளாலும் மற்றும் தடி மட்டைகளைக் கொண்டு ஒரு பெரிய கூடு கட்டி அதனைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். அது சுவாலை விட்டுப் பெரிதாக எரியும் போது அடியார்கள் அனைவரும் அந்த ஒளிப்பிரகாசத்திலே இறைவனைக் கண்டு வணங்குவார்கள்.

இந்தத் திருக்கார்த்திகைத் தீப தரிசனம் பற்றிய ஒரு புராணக் கதையும் இருக்கின்றது. படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

Add Comment

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *